×

பெரம்பலூர் மாவட்ட வன பகுதிகளில் மான்களுக்கு தொட்டிகளில் நிரப்பிய தண்ணீர் வற்றாதிருக்க கொட்டகை அமைக்க வேண்டும்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட வனப் பகுதிகளில் மான்களுக்கு தண்ணீர் நிரப்பியும் வற்றாதிருக்க கொட்டகை அமைத்து தண்ணீர்த் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வெண்பாவூர், மாவிலிங்கை, அரசலூர், பாண்டகப்பாடி, காரியானூர், கை.களத்தூர், பில்லங்குளம், அய்யனார் பாளையம், ரஞ்சன்குடி, மேட்டுப்பாளையம், முருக் கன்குடி, சித்தளி, பேரளி, பாடாலூர், சத்திரமனை, நக்கசேலம், களரம்பட்டி, மேலப்புலியூர், நாவலூர், இரட்டைமலை சந்து, அரசலூர் ஆகிய இடங்களில் பெரம்பலூர் மாவட்ட வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ள காப்புக் காடுகள் மற்றும் சமூக வனக்காடுகள் உள்ளன. இவற்றில் அரிய வகை மான்களான புள்ளி மான்கள் நூற்றுக் கணக்கில் வசித்து வருகின்றன.

கடுமையான வறட்சி காரணமாக வனப் பகுதிகளில் மான்களுக்கு உணவான புற்கள் காய்ந்து சருகாகி விட்ட நிலையில், தண்ணீரும் இல்லாமல் போனதால் அவை உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் வனப்பகுதியை விட்டு வெளியேறி வயல்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும் தண்ணீருக்காக தாவிச் செல்லும்போது, தவறி கிணறுகளில் விழுந்து பலியாவதும் வனப் பகுதிகளை சார்ந்துள்ள கிராமப் புறங்களில் உட்புகும்போது தெருநாய்கள் கடித்து இறப்பதும், சாலைகளை கடக்கும் போது வாகனங்கள் மோதி இறப்பதும் அதிகரித்து வருகின்றன.

இதற்காக வனப் பகுதிகளுக்குள் தடுப் பணைகள் அமைப்பது, தண்ணீர் தொட்டிகள் அமைப்பது என வனத் துறையினர் சில வருடங்களுக்கு முன்பு ஈடு பாட்டோடு இருந்த நிலையில், தற்போது எப்போதாவது தண்ணீர் தொட்டிகளில் வனத் துறையினர் நீர் நிரப்பு வதால் அதனை கண்டறிந்து தேடி வந்து மான்கள் குடிப்பதற்குள் வெப்பத்தில் தண்ணீர் வற்றி, தொட்டி வறண்டு போவதால், மான்கள் ஏமாற்றம் அடைந்து வனப் பகுதிகளை விட்டு வெளியேறும் நிலைக்கே தள்ளப்படுகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் குறிப்பாக மான்கள் அதிகம் வசிக்கக்கூடிய வெண்பாவூர் காப்புக் காடுகளில் வசிக்கும் மான்களுக்கு போதிய குடிநீர் வசதி உள்ளதா என்பது குறித்து பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் கடந்த டிசம்பர் மாதம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மான்களுக்கு தேவையான குடிநீர் சேமித்து வைக்கப் போதுமான குட்டைகள் உள்ளதா, மான்கள் காட்டை விட்டுத் தண்ணீருக்காக, உணவுக்காக வெளியே வரும் நிலை இல்லாமல், போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், காப்பு காட்டில் புதியதாக எவ்வளவு மரக் கன்றுகள் நடப்படவுள்ளன என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

721.18 ஹெக்டர் பரப்பளவு கொண்ட வெண்பாவூர் காப்புக்காட்டில் புதியதாக வேம்பு, புங்கன், நீர்மருது, நாவல், இலுப்பை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக் கன்றுகள் நடவு செய்யப் பட்டுள்ளது. மான்கள் குடி நீர் அருந்தும்வகையில் குடி நீர்குட்டை, தடுப்பணைகள், கசிவுநீர்க் குட்டைகள் உள்ளன.அதேபோல 368.96 ஹெக்டர் பரப்பளவில் உள்ள மாவிலங்கை காப்புக் காட்டிலும் வன விலங்குகள் தண்ணீர்பருக குட்டை, தடுப்பணைகள், கசிவுநீர்க் குட்டைகள் உள்ளன.

இருந்தும் கடந்த நான்கு மாதங்களாக ஒரு சொட்டு மழை கூட பெய்யாத காரணத்தால் தடுப்பணைகளும், கசிவுநீர் குட்டைகளும் காய்ந்து கிடக்கின்றன. மான்களுக்காக அமைக்கப் பட்ட தண்ணீர் தொட்டியில் வனத்துறை சார்பாக டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பினால் அவை 2நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல், சுட்டெரிக்கும் வெயிலுக்கு வற்றி போகிறது. அதற்குள் தண்ணீர் இருப்பதை அறிந்து மான்கள் தண்ணீர் குடிக்க வேண்டும், இல்லாவிட்டால் டேங்கர் லாரியில் கொண்டு வந்து ஊற்றிய தண்ணீர் பிரயோஜனம் இல்லாமல் தான் போகிறது. இதனால் வனப்பகுதியில் வெங்காய கொட்டகையை போல் ஒரு கொட்டகை அமைத்து அதற்கு கீழ் சிமெண்டினால் ஆன தண்ணீர் தொட்டியை அமைத்து தண்ணீரை ஊற்ற வேண்டும். இதில் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு, வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வன உயிரின ஆர்வலர்களும், வனப்பகுதியைச் சுற்றி உள்ள கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லா விட்டால் வனங்களை விட்டு வெளியேறும் மான்கள் கிணற்றில் விழுந்தும், வாகனங்கள் மோதியும் பலியாவதை தடுக்க முடியாது.

வனத்துறை அதிகாரி தகவல்
இது தொடர்பாக வேப்பந்தட்டை வனச்சரகர் சுதாகர் என்பவரிடம் கேட்ட போது தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்பாவூர் வனப்பகுதியில் அரியவகை புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. மான்களின் குடிநீருக்காக கடந்த வாரம் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பினோம். அது அடிக்கும் வெயிலுக்கு தாங்காமல் சீக்கிரம் காய்ந்து விடுகிறது. மீண்டும் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்து வருகிறோம் எனத்தெரிவித்தார்.

The post பெரம்பலூர் மாவட்ட வன பகுதிகளில் மான்களுக்கு தொட்டிகளில் நிரப்பிய தண்ணீர் வற்றாதிருக்க கொட்டகை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Perambalur ,Venpavur ,Mavilingai ,Arasalur ,Pandagappadi ,Karianur ,Kai.Kalathur ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...